THIS IS MY BLOG

Saturday, 18 April 2015

மத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்

 

த்திய கிழக்கில் நடக்கும் ஷியா-சுன்னி மதவாத சண்டைகளில் இப்போ புதிதாக பாகிஸ்தானும் தலையிட ஆரம்பித்துள்ளது. சவூதி அரேபியா ஆரம்பித்துள்ள சண்டையில் பாகிஸ்தானை தலையிட சவூதி அரச குடும்பம் கேட்டதும் பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப், ‘சவூதியின் மீது நடக்கும் எந்த ஒரு தாக்குதலும் பாகிஸ்தானின் மீது நடக்கும் தாக்குதல், சவூதியின் உதவிக்கு பாகிஸ்தான் வரும்’ என சொல்லியிருப்பது, சிக்கலான அரசியல் விளையாட்டிலே இன்னோர் அத்தியாயத்தை ஆரம்பித்திருக்கின்றது.
மத்திய கிழக்கிலே பாகிஸ்தானிய தலையீடு ஒன்றும் புதிது அல்ல. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதில் இருந்தே அது தன்னை ஒரு கூலிப்படை நாடாக அறிவித்துக்கொண்டு மற்றவர்களின் வேலையை செவ்வனே செய்து வருகிறது என்பதால் ஆச்சரியப்படவும் ஏதுமில்லை.
ஜோர்டான் பாலஸ்தீன குழுக்குக்களுக்கு எதிராக 1970 செப்டெம்பரில் ஆரம்பித்த தாக்குதலை முன்னின்று நடத்தியது அப்போதைய ஜோர்டானுக்கான ராணுவ பயிற்சியாளர் ஜியா உல் ஹக் தான். யுஏஈ யின் ஷேக் தனியாக ஒரு விமான தளம் வைத்திருப்பதாக இருந்தாலும் சரி அமெரிக்காவுக்கே தனியா ஒரு விமானதளத்தை விட்டுக்கொடுப்பதாக இருந்தாலும் சரி பாகிஸ்தான் எப்போதுமே அடுத்தவர்களின் வேலையை செய்ய மிகவும் ஆர்வம் காட்டி வருகிறது.
ஆனால் இப்போது மத்திய கிழக்கிலே நடப்பது ஆயிரம் வருசம் பழைமையான சண்டை. ஷியா ஈரான் ஆனது தன்னுடைய பழைய பேரரசை கட்டியமைக்க முயற்சி செய்கிறது. சுன்னி சவூதியோ தன் பங்குக்கு தானும் ஒரு பேரரசை கட்டியமைக்கவேண்டும் என விரும்புகிறது.
middle_east_map
ஈரானும் சும்மா இராமல் ஈராக், பஹ்ரைன், லெபனான், சிரியா போன்ற நாடுகளில் தலையீட்டு சவூதி, குவைத், யுஏஇ நாடுகளை அரை வட்டமாக சுற்றி வளைக்க முயல்கிறது. ஈராக்கில் ஷியா பிரதமருக்கு ஆதரவு, சிரியாவின் அசாட்டுக்கு ராணுவ உதவி என பல வேலைகளை செய்கிறது. ஈரானிய ராணுவ ஜெனரலான குசாம் சுலைமானி ஆசாட்டுக்கு உதவியான ராணுவ உத்திகளை வகுத்தும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தலமையேற்று நடத்தியும் உள்ளார்.
சவூதியும் சளைத்தது அல்ல. ரஷ்யாவின் செச்சனயா வரை தன்னுடைய உளவுத்துறையை அனுப்பி தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. முன்பு உளவுத்துறை தலைவரும் இப்போதைய சவூதி அரசருமான சல்மான் அசீஸ் இதை செவ்வனே செய்தவர். ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீட்டு தீவிரவாதிகளுக்கு உதவியதாலேயே சவூதிக்கு எதிராக ஈரானில் செயல்களை ரஷ்யா ஆதரிக்கிறது. ஐ.நா.வில் சிரியாவின் அசாட்டுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளும் ரஷ்யாவின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்தப்பட்டுள்ளன. அதுவும் இப்போது சல்மானே அரசர் ஆகிவிட்டதால் இது இன்னும் பிரச்சினை. ரஷ்யாவின் மீதான பொருளாதார தடைகளின் காரணமாகவே பெட்ரோலிய விலையை சவூதி மிகவும் குறைவாக வைத்து ரஷ்யாவின் பொருளாதாரத்தையும் ஈரானின் பொருளாதாரத்தையும் அடிக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
முன்பு பஹ்ரைனில் நடந்த கிளர்ச்சியை இதே போல் சவூதி ராணுவத்தை அனுப்பி கிளர்ச்சியை அடக்கியது நினைவிருக்கலாம். இதே போல் எகிப்திய முஸ்லீம் பிரதர்ஹூட் அமைப்புக்கு எதிராக எகிப்திய ராணுவத்தை ஆதரித்து அதை ஆட்சியில் அமர்த்தியது. இப்போது எகிப்துக்கு 300 பில்லியன் டாலர்கள் வரை நிதியுதவிக்கு வளைகுடா நாடுகள் ஒப்புக்கொண்டிருக்கின்றன !
இப்போது ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்கள் 20 வருடம் ஆண்ட மன்சுர் ஹடியின் கட்சியின் ஆட்சியை துரத்தி விட்டு தாங்களே ஆட்சியாளர்கள் என அறிவித்து உள்ளார்கள். ஏமனில் உள்நாட்டு போரோ அல்லது அதிலே சவூதி தலையிடோ புதிது அல்ல. 1970களில் நடந்த உள்நாட்டுபோரிலும் எகிப்தும் சவூதியும் தலையிட்டு இருந்தன. (இங்கே ஏமனையும், அதற்குப் பக்கத்திலே மஸ்கட்டை தலைநகராக கொண்டிருக்கும் ஓமனையும் போட்டு குழப்பிக்ககூடாது. இரண்டும் வேறு வேறு நாடுகள்).
இப்போது 10 நாடுகளின் கூட்டுப்படையிலே பாகிஸ்தானும் சேருவது தான் இன்னோர் பிரச்சினையை புதிதாக கொண்டுவருகிறது. பாகிஸ்தானிய ராணுவம் இன்னும் பணம், அரசியல் அதிகாரம் எல்லாவற்றையும் பெறுவது ஒரு புறம் என்றாலும், பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளை ஒழிப்பது நடக்காமல் போகும். இப்போதே பாகிஸ்தானின் பஞ்சாபிய தீவிரவாதிகள் தண்டிக்கப் படவில்லை. பெஷாவர் ராணுவப் பள்ளியில் குழந்தைகளை படுகொலை செய்த சம்பவத்திற்கு பின்பு கூட ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை.
திரும்பவும் ஆஃப்கான், காஷ்மீர் என பாகிஸ்தான் தன்னுடைய கூலிப்படை ஏற்றுமதியையும் தீவிரவாதிகளை ஆதரிப்பதையும் ஆரம்பிக்கும்.  அரேபிய நாடுகளும் அமெரிக்காவும் போடும் சிந்தினது சிதறினதை வைத்து பொருளாரத்தை நடத்தும். சவூதியை மையமாக கொண்டு செயல்படும் தீவிரவாதிகளை இனிமேல் சவூதி இந்தியாவிடம் ஒப்படைக்குமா என்பதும் சந்தேகமே.
அமெரிக்கா மத்திய கிழக்கிலே தன்னுடைய கையை கழுவும் பட்சத்திலே இது இன்னும் பெரும் பிரச்சினைகளை கொண்டுவரும். காரணம் இப்போது அமைதியாக இருக்கும் இஸ்ரேல். சமீபத்திலே இஸ்ரேலிய தாக்குதலிலே ஈரானிய ராணுவ ஜெனரல்கள் இறந்ததும் அதற்கு சவூதி ஆதரவு அளித்ததும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று. ஈரானிய அணு உலைகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவேண்டும் என்றே அரபு நாடுகள் எதிர்பார்க்கின்றன. அதற்கு இஸ்ரேலிய அதிபர் நெதன்யாஹுவை ஆதரிக்கவும் செய்கிறன. இந்தியாவும் இஸ்ரேலும் கூட்டணி வைப்பதையும் அரபு நாடுகள் இதனாலே பெரிதாக ஏதும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்போதும் இந்தியா ஈரானில் துறைமுகம் கட்டியிருக்கிறது, அதையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் பாதையையும் உருவாக்கிக்கொண்டுள்ளது. பண்டமாற்று முறையில் ஈரானிடம் பெட்ரோலியம் வாங்கிக்கொண்டு இருக்கிறது.
இதிலே இந்தியாவின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதுவரை ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்த இஸ்லாமிய மதப்பிரிவுகளின் கூட்டணிக்கு இந்தியாவின் எதிர்வினை என்ன என்பதும் தெரியவில்லை. ஈரானுடைய உறவு எப்படியிருக்கும் என்பதும் தெளிவாகவில்லை.
ஆனால் இன்னோர் சுற்று பிரச்சினைக்கு வளைகுடா பகுதி தயாராகிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

0 comments:

Post a Comment

Popular Posts

www.http://ananthalex.blogspot.in/. Powered by Blogger.