THIS IS MY BLOG

Friday, 19 June 2015

நேற்று சரத்... இன்று விஷால்... கலகலக்கும் நடிகர் சங்க விவகாரம்!

மதுரைக்கு  நேற்று வருகை தந்து ஆதீனத்திடம் ஆசி பெற்று, மதுரை நாடக நடிகர் சங்கத்தில் ஆதரவு திரட்டி, செய்தியாளர்களிடம் நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக தன்னிலை விளக்கம் கொடுத்த நடிகர் சரத்குமாருக்கு கவுன்டர் கொடுக்கும் விதமாக, இன்று காலை விஷால், கார்த்தி, நாசர், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் மதுரை வந்தனர்.
 
பாண்டியன் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் சங்க விவகாரம், வருகின்ற நடிகர் சங்க தேர்தல் சம்பந்தமாக தங்களுடைய நிலைப்பாடு என்னவென்பதை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தெளிவுபடுத்தியவர்கள், அதைத்தொடர்ந்து மதுரை சுண்ணாம்புக்காரத்தெருவில் அமைந்திருக்கும் மதுரை நாடக நடிகர் சங்கத்துக்கு வருகை தந்தனர்.
இவர்களை வரவேற்க நாடக நடிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் காத்திருந்தார்கள். பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.

இவர்களை வரவேற்ற சங்கத்தலைவர் மோகன், "இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் நடிகர் சங்கம் மதுரை சங்கம்தான். இங்கிருந்துதான் பல பிரபல சினிமா நடிகர்கள் உருவானார்கள். அப்படிப்பட்ட எங்களை நடிகர் சங்கத்தில் சேர்க்க கூடாதென்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். இதை தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டிக்க வேண்டும். எங்களுக்கு எல்லா நடிகர்களும் ஒன்றுதான். நாடக நடிகர்கள் நல்லபடியாக வாழும் வகையில் நடிகர் சங்கத்தினர் நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும்" என்றார்.
நடிகர் கருணாஸ் பேசும்போது, "இதே மதுரையில் இருபது வருடங்களுக்கு முன்பு இசை கச்சேரி மேடைகளில் மிமிக்ரி செய்தும், பாடல் பாடியும் திரிந்தவன் நான். அதன் பின் நாடக அமைப்பாளர்களுக்கு டீ, வெற்றிலை பாக்கு வாங்கி கொடுத்து, நாடகங்களில் சின்ன கேரக்டரில் நடித்தவன். அந்த பயிற்சிதான் இன்று என்னை சினிமா நடிகனாக மாற்றியது. நான் உங்கள் வீட்டு பிள்ளை.
இங்கு ஒரு நாடக நடிகர் காலமானபோது ஈமச்சடங்கு செய்ய பணமில்லாமல் நோட்டு போட்டு காசு வசூலித்த கொடுமையை அப்போதைய நடிகர் டி.ஆர். மகாலிங்கம் கேள்விப்பட்டு மனம் துடித்தார். நாடக நடிகரோ, சினிமா நடிகரோ நமக்கென்று எதிர்காலத்துக்காக ஒரு அமைப்பு வேண்டுமென்றுதான் தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கினார். அப்படி நல்லது செய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் நடிகர் சங்கம். தற்போது அந்த சங்க நிர்வாகிகளுக்கும், உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்பட்டு விட்டது. உங்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் பல்வேறு வகையில் பிரிந்து கிடந்த நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம். நடிகர் சங்கத்தை வைத்து நாங்கள் ஆதாயம் அடையப் போவதில்லை. இனி அதில் உங்கள் நலனுக்காக இயங்க வேண்டுமென்றுதான் உங்களை தேடி வந்திருக்கிறோம்" என்றார்.
நாசர் பேசும்போது, "நான் செங்கல்பட்டில் பிறந்தவன். எங்கள் பகுதியில் நாடகத்தை விட தெருக்கூத்துகள்தான் அதிகம். அதைபார்த்து நடிப்பை கற்றவன் நான். இன்றுவரை தெருக் கூத்தையும், நாடகத்தையும் மதிப்பவன் நான். நாங்கள் சினிமாவில் நடிப்பது சும்மா, உங்களைப்போல் நடிக்க முடியாது. அப்படிப்பட்ட நீங்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கிறீர்கள். உங்கள் தன்மானம் காக்கப்பட வேண்டும். எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சம்பந்தமில்லாத நாங்கள் ஒன்று சேர்ந்து வந்திருக்கிறோம்" என்றார்.

விஷால் பேசும்போது, "நாங்கள் பதவி சுகத்தை அடைய வேண்டும், அதற்கு நீங்கள் உதவ வேண்டுமென்று கேட்டு வரவில்லை. போதிய வருமானமில்லாமல் இருக்கும் உங்களை நல்ல நிலைக்கு கொண்டுவரவே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அந்த வகையில் நாங்கள் எப்போதும் உங்களுக்காக இருப்போம். நீங்கள் வாங்கி போட்டிருக்கும் நிலத்தில் பெரிய அளவில் நாடக நடிகர் சங்க கட்டிடம் கட்ட உதவுவோம்" என்றார்.

0 comments:

Post a Comment

Popular Posts

www.http://ananthalex.blogspot.in/. Powered by Blogger.